சண்டிகர் மேயர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி சார்பாக குலதீப் குமார் போட்டியிட்டார்.
பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்டார். இதில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாக பதிவான 20 வாக்குகளில் 8 வாக்குக்கள் செல்லாத வாக்குகள் என அறிவித்தார் தேர்தல் அதிகாரி அனில் மசிஹ். தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் வாக்கு சீட்டுகளை திருத்தும் வீடியோ வெளியாகி வைரலானது.
இதனை அடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை செய்யப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே தேர்தல் அதிகாரிக்கு எதிரான கருத்துக்களை தான் நீதிபதிகள் கூறிவந்தனர்.
இன்று இதன் இறுதி கட்ட விசாரணையில், வீடியோ ஆதார பதிவில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு பதிவான வாக்குகளை திருத்தம் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் இந்த தேர்தல் வழக்கில் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தேர்தலை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றியாளர் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.
0 Comments