ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊக வணிகத்தைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கு பொருந்தக்கூடிய கோதுமையின் இருப்பு வரம்புகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மீதான உரிமத் தேவைகள், இருப்பு வரம்புகள் மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகளை அகற்றுதல் (திருத்தம்) ஆணை, 2023 ஜூன் 12 அன்று வெளியிடப்பட்டது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2024, மார்ச் 31 வரை பொருந்தும்.
கோதுமையின் விலையை மிதப்படுத்தும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கோதுமை இருப்பு வரம்பை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள் இருப்பு வரம்பு 1000 மெட்ரிக் டன் என்பதிலிருந்து 500 மெட்ரிக் டன் என மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 5 மெட்ரிக் டன் என்பதில் மாற்றம் இல்லை.
பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்களின் ஒவ்வொரு கிடங்குக்கும் 5 மெட்ரிக் டன் மற்றும் அனைத்துக் கிடங்குகளிலும் 1000 மெட்ரிக் டன் என்பது ஒவ்வொரு கிடகுக்கும் 5 மெட்ரிக் டன் மற்றும் அனைத்து கிடங்குகளிலும் 500 மெட்ரிக் டன் என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிறுவனங்களிடம் உள்ள சரக்குகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்தால், அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அவர்கள் அதை பரிந்துரைக்கப்பட்ட இருப்பு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
நாட்டில் கோதுமைக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த இருப்பு வரம்புகள் அமலாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிப்பார்கள்.
மேலும், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கோதுமை விலையைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் கோதுமையின் இருப்பு நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது
0 Comments