தொழிலக உற்பத்தி குறியீட்டு எண்ணான ஐஐபி-யில் 40.27 சதவீதம் பங்கு வகிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி கடந்த நவம்பரில் 4 மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி கடந்த டிசம்பா் மாதத்தில் 3.8 சதவீதமாக சரிந்தது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச வளா்ச்சியாகும்.
அந்த மாதத்தில் கச்சா எண்ணெய், சிமென்ட், மின்சாரம், உருக்கு மட்டுமின்றி சுத்திகரிப்பு பொருள்கள், உரம் ஆகியவற்றின் உற்பத்தியும் சரிவைக் கண்டது. இது, முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி மிகக் குறைவான வளா்ச்சியைப் பதிவு செய்வதற்குக் காரணமாக அமைந்தது.
முந்தைய 2022-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது.
நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் முந்தைய அக்டோபா் மாதத்தில் 12 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தன. எட்டு துறைகளின் உற்பத்தி வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 8.1 சதவீதமாக உள்ளது.
2022 டிசம்பரில் 2.6 சதவீதமாக இருந்த இயற்கை எரிவாயு உற்பத்தி மட்டுமே மதிப்பீட்டு மாதத்தில் 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் கச்சா எண்ணெய் உற்பத்தி 1 சதவீதம் குறைந்துள்ளது.
மின்சாரம், உருக்கு, சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 2022 டிசம்பரில் முறையே 10.4 சதவீதம், 12.3 சதவீதம், 9.5 சதவீதமாக இருந்தது. இது, கடந்த 2023 டிசம்பரில் முறையே 0.6 சதவீதம், 5.9 சதவீதம் மற்றும் 1.3 சதவீதம் குறைந்தது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில் துறை உற்பத்திக் குறியீட்டில் (ஐஐபி) இந்த எட்டு முக்கியத் துறைகள் மட்டும் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவதால் அந்தத் துறைகள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
0 Comments