நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை ‘ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்பு சட்டத் திருத்த மசோதா - 2024’ அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் ஜுகல் கிஷோா் சா்மா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் சிந்தா அனுராதா ஆகியோா், மசோதாவை வரவேற்றுப் பேசினா்.
ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி சட்டங்களில் அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்க நிலைத்தன்மையைக் கொண்டுவரவும் தற்போதைய மசோதா வழிவகை செய்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் முந்தைய காலங்களில் புறக்கணிக்கப்பட்டு வந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த மசோதா மூலம் நீதி உறுதி செய்யப்படும். விவாதத்துக்குப் பின்னா் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2019, ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதோடு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகிறது.
0 Comments