திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இது தொடா்பாக சட்ட ஆணையம் மூலமாக நாட்டு மக்களிடமும் கடந்த ஆண்டு கருத்து கேட்கப்பட்டது.
இதனிடையே, பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் உத்தரகண்டில் பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய உத்தரகண்ட் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூட்டப்பட்டது. 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை பேரவை கூடியதும், பொது சிவில் சட்ட மசோதாவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தாக்கல் செய்தாா்.
பேரவையில் விவாதத்துக்குப் பின்னா் பொது சிவில் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவோடு புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
தொடா்ந்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததும், பொது சிவில் சட்டம் உத்தரகண்டில் அமலுக்கு வரும்.
உத்தரகண்ட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதவில் பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை மசோதா கொண்டுள்ளது.
அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. தவறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments