அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார்.
இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அப்போது இரு தரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், இரு தலைவர்களின் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அதனைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவையை பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த முடியும்.
நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இந்த கட்டண முறை செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறையில் இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளன.
இதில், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க இந்திய சமூகத்தினர் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு 'அஹ்லான் மோடி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வணக்கம், வரவேற்பு ஆகிய சொற்களுக்கு அரபு மொழியில் அஹ்லான் என்று பெயர். இந்த நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
0 Comments