பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஓகா அருகே உள்ள பேட் துவாரகா தீவுக்கு சென்ற பிரதமர் மோடி கிருஷ்ணர் கோவில் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஓகா துறைமுகத்தையும் பேட் துவாரகையையும் இணைக்கக் கூடிய சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். துவாரகையில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்கும் பிரதமர் மோடி சென்று வழிபாடு நடத்தினார்.
ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா என்ற அரபின் கடலின் கட்ச் வளைகுடாவில் உள்ள தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது சுதர்சன் சேது கேபிள் பாலம். சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள இந்த பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்.
சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை உள்ளது.
நடைபாதையின் மேல் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பாலம் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, துவாரகா மற்றும் பேட்-துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களின் நேரத்தை கணிசமாகக் குறைக்கும்.
பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, யாத்ரீகர்கள் பேட் துவாரகாவை அடைய படகு போக்குவரத்தை நம்ப வேண்டியிருந்தது. இந்த பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.
மேலும் ராஜ்கோட் - ஓகா, ராஜ்கோட் - ஜெதல்சார் - சோம்நாத் மற்றும் ஜெதல்சார் - வன்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை எண் 927-ன் தோராஜி - ஜம்கந்தோர்னா - காலவாட் பிரிவை அகலப்படுத்தும் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
0 Comments