பணியாளர், பொது நிர்வாகம் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, கம்போடியாவின் குடிமைப் பணி அமைச்சகத்துடன் குடிமைப் பணியின் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.
குடிமைப் பணிகளில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் இந்தியா மற்றும் கம்போடியா இடையேயான சுமூகமான நட்புறவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்ல இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கம்போடியா அரசின் சார்பில் துணைப் பிரதமரும், குடிமைப் பணிகள் அமைச்சருமான திரு ஹுன் மனி மற்றும் மத்திய அரசின் சார்பில் கம்போடியா அரசுக்கான இந்திய தூதர் டாக்டர் தேவயானி கோப்ரகடே ஆகியோர் புனோம் பென்னில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர்.
2023-24-ம் ஆண்டில், 156 கம்போடிய அரசு ஊழியர்கள் சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தில் 4 திறன் மேம்பாட்டு திட்டங்களில் கலந்து கொண்டனர்.
2024-25-ம் ஆண்டில், 240 கம்போடிய அரசு ஊழியர்களுக்கு 6 திறன் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.
0 Comments