தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர்.
தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55% ஆகவுள்ளது.
கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 12,625 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எழுதியுள்ளனர். இவற்றில் 7491 மேல்நிலைப் பள்ளிகளும், 5134 உயர்நிலைப் பள்ளிகளும் அடங்கும்.0 இதில் 415 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. 1364 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.
பள்ளி வாரியாக தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும் பொழுது அரசு பள்ளிகள் 87.90 சதவீத தேர்ச்சியையும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 சதவீத தேர்ச்சியையும், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.
இதேபோல் இரு பாலர் பள்ளிகள் 91.93 சதவீத தேர்ச்சியையும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீத தேர்ச்சியையும் ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீத தேர்ச்சியும் பெற்றிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
0 Comments