ஐசிசியின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்கானப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி, நமீபியாவின் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது வாசிம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முகமது வாசிம் வென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அரபு அமீரக அணியின் கேப்டனான முகமது வாசிமுக்கு ஏப்ரல் மாதம் சிறப்பானதாக அமைந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் ரன்களைக் குவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானது முதல் முகமது வாசிம் ஐக்கிய அரபு அமீரக அணியின் பேட்டிங்கில் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறார்.
ஒருநாள் போட்டிகளில் 1,289 ரன்களுடன் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக அதிக ரன்கள் குவித்த 3-வது வீரராக அவர் உள்ளார். டி20 போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்துக்காக அதிக ரன்கள் குவித்தவர்களில் 1,977 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
0 Comments