46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 26-வது கூட்டத்தில் அண்டார்டிகாவில் சுற்றுலாவை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பான விவாதங்களை நடத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள கோவாவின் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், அண்டார்டிக் ஒப்பந்த செயலகம் ஆகியவை இந்தக் கூட்டங்களை கேரளாவின் கொச்சியில் 2024, மே 20 முதல் 30, வரை நடத்த உள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 350-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு ஆகியவை 1959-ல் 56 நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி நடத்தப்படும் உயர்மட்ட உலகளாவிய வருடாந்தர கூட்டங்கள் ஆகும்.
இந்தக் கூட்டங்களின் போது, அண்டார்டிகா ஒப்பந்தத்தின் உறுப்பு நாடுகள் அண்டார்டிகாவின் அறிவியல், கொள்கை, நிர்வாகம், மேலாண்மை, பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு 1991-ம் ஆண்டில் அண்டார்டிக் ஒப்பந்தத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறையின் கீழ் நிறுவப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு அண்டார்டிகாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அண்டார்டிக் ஒப்பந்தக் கூட்டத்திற்கு ஆலோசனை வழங்குகிறது.
1983-ம் ஆண்டு முதல் அண்டார்டிக் ஒப்பந்தத்தில் இந்தியா ஆலோசனை வழங்கும் நாடாக இருந்து வருகிறது. மற்ற 28 ஆலோசனை நாடுகளுடன், அண்டார்டிகாவின் அறிவியல் ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிர்வகிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.
நிர்வாகம், அறிவியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து ஒத்துழைப்பு போன்ற விஷயங்களில் அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்களை முன்மொழிந்து வாக்களிக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு.
0 Comments