தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த சிற்றூர் சித்திரக்குடியை சேர்ந்தவர் முனைவர் சத்தியா. இவரது நிலத்தில் நந்தி சிலை பாதி புதைந்த நிலையில் இருப்பதாக அவர் கொடுத்த தகவலின் பேரில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், அரசு நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு அந்த பகுதியில் நேற்றுமுன்தினம் களஆய்வு செய்தனர். அப்போது அங்கு நந்திசிலை, சேதமடைந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.
இந்த நந்தியானது கி.பி.910ம் நூற்றாண்டு சோழர்காலத்தை சார்ந்ததாக காணப்படுகிறது. நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திமில் இப்பகுதியிலிருக்கும் காளைக்கு உள்ளது போலவே இருக்கிறது.
அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் செல்ல கூடிய ஆனந்த காவிரி வாய்க்காலின் உட்புறத்து தென்புரக்கரையினை ஒட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்கு கீழாக பாதி புதைந்த நிலையில் மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிலை கண்டறியப்பட்டது. இவை இரண்டும் சோழர்கள் காலத்திய சிற்பங்களாகும்.
0 Comments