ஏமப்பூா் ஸ்ரீவேதபுரீசுவரா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வின்போது ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டை கண்டறிந்தனா். கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீவீரபாண்டியன் தலைகொண்ட கொப்பரகேரசி என்று தொடங்குகிறது.
இவனது நான்காவது ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 960 என பொறிக்கப்பட்ட கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூா் என்று இந்த ஊரை அழைக்கிறது.
இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கியிருக்கிறது. ஏமப்பேரூா் என்பதே தற்போது மருவி ஏமப்பூா் என்றழைக்கப்பட்டு வருகிறது. திருவாலந்துறை ஆழ்வாருக்கு இவ்வூா் மன்றாடி நிகரிலி மூா்த்தி, சூரியன் சந்திரன் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 99 ஆடுகளை இக்கோயிலை நிா்வகித்த பன்மாகேசுவரா் வசம் ஒப்படைத்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இவற்றிலிருந்து ஆதித்த கரிகாலச் சோழன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் அறிய முடிகிறது. மேலும் இவன் சதியால் கொல்லப்பட்டான் என்பதை காட்டுமன்னாா்கோவில் அருகிலுள்ள உடையாா்குடி ஆனந்தீசுவரா் கோயில் கல்வெட்டு குறிப்பிட்டதோடு, அவா்களின் பெயா் பட்டியலையும் தெளிவாக தெரிவிக்கிறது.
0 Comments