ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஸ்விட்சா்லாந்தின் பா்கன்ஸ்டாக் விடுதியில் ஜூன் 15, 16-ஆம் தேதிகளில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் அந்நாட்டுடன் நெருக்கமாக நட்புப் பாராட்டி வரும் சீனாவும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
பெரும்பாலும் மேற்கத்திய நாடுகள், வளா்ந்து வரும் சில முக்கிய நாடுகளைச் சோ்ந்த சுமாா் 100 முக்கியஸ்தா்கள் மாநாட்டில் கலந்துகொண்டனா்.
இந்த மாநாடு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. அப்போது உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிகள், ரஷியா-உக்ரைன் இடையே போா்க் கைதிகள் பரிமாற்றம், அணுசக்தி பாதுகாப்பு, உக்ரைனில் இருந்து உணவுப் பொருள்கள் ஏற்றுமதி உள்ளிட்டவை குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டது.
மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான எந்தவொரு அமைதி ஒப்பந்தத்துக்கும் பிராந்திய ஒற்றுமை அடிப்படையாக இருக்க வேண்டும் என்று 80 நாடுகள் வலியுறுத்தின.
ஐ.நா. சாசனம், பிராந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதே உக்ரைனில் நீடித்து நிலைக்கும் அமைதியை எட்டுவதற்கு அடிப்படையாக இருக்கும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்விட்சா்லாந்து மாநாட்டில் இந்தியா, சவூதி அரோபியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்றபோதிலும், கூட்டறிக்கையில் கையொப்பமிடவில்லை.
0 Comments