செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பாலாற்றங்கரையில், பழமையான பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இவை, அக்கரை பகுதியில் பரவியிருந்த பழமையான ஆற்றங்கரை நாகரிகத்துக்கு சான்றாக உள்ளன. சமீபத்தில், செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரியின் வரலாற்று துறை பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளர்கள் சங்க செயலருமான மதுரைவீரன், பாலாற்றங்கரையில் ஆய்வு செய்தார். அப்போது, கி.மு., 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முத்திரை நாணயத்தை கண்டெடுத்துள்ளார்.
இது, 15 - 12 மி.மீ., அளவில், நீள்சதுர வடிவில், 3 மி.மீ., தடிமனுடன் உள்ளது. இந்த வெள்ளி நாணயத்தில், அம்பின் முனை, சூரியன், மலைமுகடு, டாவரின் ஆகிய வடிவ முத்திரைகள் உள்ளன.
தமிழகத்தை பல்லவர்கள் ஆண்ட காலத்தில், அவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரத்துக்கு அருகில், இந்த நாணயம் கிடைத்துள்ளதால், தமிழர்கள் கங்கை சமவெளியுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததை அறிய முடிகிறது.
இது குறித்து, தமிழ் இலக்கியங்களான பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றிலும் நிறைய பதிவுகள் உள்ளன. அதேபோல, முத்திரை நாணயங்களை உருவாக்கும் சுடுமண் அச்சு ஒன்றும் இங்கு கிடைத்தது.
மேலும், சோழர்களில் சிறந்தவனான ராஜராஜனின் வட்ட வடிவ செப்பு நாணயங்களும் கிடைத்தன. இவற்றில், ஒரு பக்கம் நின்ற நிலையிலும், மறுபக்கம் அமர்ந்த நிலையிலும் மனிதன் உள்ளான். நாகரியில் ராஜராஜன் என்ற பெயர் உள்ளது.
0 Comments