வெளியுறவுத் துறை அமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்ற ஜெய்சங்கர், அரசு முறை பயணமாக நேற்று இலங்கை சென்றார். தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்டோரின் உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை அவர் சந்தித்தார்.
அதிபர் மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பின் போது இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடு உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
பின்னர், இந்தியாவின் நிதி உதவியுடன் இந்திய மதிப்பில், 50 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை ஜெய்சங்கர் மற்றும் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் கூட்டாக துவக்கி வைத்தனர்.
கொழும்புவில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலே, அருகம்பே, மட்டக்களப்பு, திரிகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் இந்த ஒருங்கிணைப்பு மையத்தில் அடங்கும்.
மேலும், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ், கட்டப்பட்ட 154 வீடுகளை பயனாளிகளிடம், அதிபர் முன்னிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்படைத்தார்.
0 Comments