தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 400 உறுப்பினா்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் ஏஎன்சி கட்சிக்கு 159 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம், நெல்சன் மண்டேலா தலைமையில் நிறவெறியிலிருந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த அந்தக் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக பெரும்பான்மை இழந்தது.
மற்ற கட்சிகளுக்கும் ஆட்சிமைப்பதற்குத் தேவையான 201 இடங்கள் கிடைக்காததால் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்துவந்தது. இந்தச் சூழலில், தோ்தலில் 87 இடங்களைக் கைப்பற்றி 2-ஆவது இடத்தில் இருந்த ஜனநாயக முன்னணிக்கும் ஏஎன்சி கட்சிக்கும் இடையே தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, நாட்டின் பிரதமராக சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு 283 வாக்குகள் கிடைத்தன.
அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பொருளாதார சுதந்திரப் போராளிகள் (இஎஃப்எஃப்) கட்சித் தலைவா் ஜூலியஸ் மலேமாவுக்கு 44 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
அதையடுத்து, நாட்டின் அதிபராக ராமபோசா மீண்டும் 2-ஆவது முறையாகப் பதவியேற்கவிருக்கிறாா். அவரது பெரும்பாலும் வெள்ளை இன எம்.பி.க்களைக் கொண்ட ஜனநாயக முன்னணி, தோ்தலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த இங்கதா சுதந்திரக் கட்சி (ஐஎஃப்பி), சிறுபான்மையினா் கட்சியான தேசபக்தா்கள் முன்னணி (பிஎஃப்) ஆகியவை இடம் பெறும்.
0 Comments