பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் சரப்ஜோத் சிங் இணை, தென்கொரியாவின் லீ வோங்கோ - ஓ யே ஜின் இணையை எதிர்கொண்டது.
முதல் சுற்றை இழந்த போதும் மனம் தளராத இந்திய இணை, அடுத்தடுத்த சுற்றுகளில் இலக்கை நோக்கி துல்லியமாக சுட்டு புள்ளிகை குவித்தது.
இறுதியில் 16-10 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்பு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர், 124 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையை சமன் செய்தார்.
முன்னதாக 1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆங்கிலோ இந்தியனான நார்மன் பிரிட்சர்ட்ஸ் தடகளத்தில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது.
மேலும், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் தன் வசப்படுத்தியுள்ளார்.
0 Comments