ஹேமந்த் சோரன் மீது நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளைத் தொடர்ந்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் கல்பனாவுக்கு ஆதரவு இல்லை என்பதால் சீனியரான சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் ஜாமீன் மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், அவர் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமுமே இல்லை என கூறி ஜாமீனில் விடுதலை செய்தது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடும் செய்திருக்கிறது.
இந்தப் பின்னணியில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த சம்பாய் சோரன் தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஹேமந்த் சோரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் கொடுத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனடிப்படையில் இன்று மாலை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 3-வது முறை பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.
0 Comments