பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்கையுடன் களமிறங்குகின்றனர்.
ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் 32 வகையான விளையாட்டுகளில், 329 பந்தயங்கள் நடக்க உள்ளன. இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் அடங்கிய குழுவினர் 16 வகை விளையாட்டுகளில் பதக்க வேட்டையில் இறங்குகின்றனர். பாரிஸ் மட்டுமல்லாது பிரான்சின் வேறு 16 நகரங்களிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க விழாவில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு அரங்கத்தில் இல்லாமல், பாரிஸ் நகரின் புகழ் பெற்ற 'சென்' ஆற்றில் நடைபெற்றது.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 100க்கும் அதிகமான படகுகளில் ஏறி 'சென்' ஆற்றில் பாரிஸ் நகரின் முக்கிய இடங்கள் வழியாக பயணம் செய்தது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கிய இந்த 'மிதக்கும் அணிவகுப்பு' புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அருகே ட்ரோகடெரோ பகுதியில் நிறைவடைந்தது. டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல் மற்றும் பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து (பேட்மின்டன்) தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்க, இந்திய குழுவினர் படகுகளில் உற்சாகமாக அணிவகுத்து வந்தனர்.
இந்திய வீரர்கள் பைஜாமா குர்தா அணிந்தும், வீராங்கனைகள் தேசியக் கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் புடவை அணிந்தும் அணிவகுப்பில் பங்கேற்றது உலக அளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்ட ஒலிம்பிக் சுடர், பாரம்பரிய முறைப்படி பிரமாண்ட கொப்பரையில் ஏற்றப்பட்டது.
0 Comments