கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் இன்று (ஜூலை 25) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினார்கள். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
தீர்ப்பை இன்று காலை வாசித்த தலைமை நீதிபதி சந்திரசூட், 'சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை.
அரசியலமைப்பின் 246-வது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங்களே சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெறுகின்றன. கனிம வளம் கொண்ட நிலங்கள் 'நிலங்கள்' என்ற விளக்கத்துக்குள் அடங்கும்.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி அல்ல. அது குத்தகை பணம்தான்' என தெரிவித்தார்.
நீதிபதி நாகரத்னா வழங்கிய தீர்ப்பில், 'சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை' என தெரிவித்தார்.
0 Comments