தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (13-8-2024) தலைமைச் செயலகத்தில் 16-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த முதலீடுகளின் மூலம், 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிபாகங்கள் மற்றும் மின்கல உற்பத்தி ஆகிய துறைகளில் 15 நிறுவனங்கள் 44,125 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிற்குப் பல புதிய முதலீடுகள் வரப்பெறுவதோடு, அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எரிசக்தித் துறை சார்பாக தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் (PSP) கொள்கை 2024, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் (SHP) கொள்கை 2024, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை 2024 ஆகிய புதிய கொள்கைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதுப்பித்த மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை 2024 / RENEWAL AND LIFE EXTENSION POLICY FOR WIND POWER PLANTS 2024
தமிழ்நாட்டில் 1984-ஆம் ஆண்டு முதல் காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கண்ட காற்றாலைகள் குறைந்த திறன் கொண்ட பழைய காற்றாலைகள் ஆகும்.
இக்காற்றாலைகளின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க காற்றாலைகளை புனரமைத்தல் (Wind Repowering), புதுப்பித்தல் (Wind refurbishment) மற்றும் ஆயுள் நீட்டிப்பு (Wind Life Extension) ஆகிய மூன்று வழிகள் அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி மேலும் 25% அதிகரிக்க இக்கொள்கை வழிவகுக்கும்.
மேற்கண்ட மூன்று கொள்கைகள் வாயிலாக, நமது மாநிலத்தின் மாசற்ற, பசுமை எரிசக்தி அதிகரிக்கப்படுவதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயம் செய்துள்ள 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பில் 50% பசுமை மின் உற்பத்தி என்ற உயரிய இலக்கினை அடைவதற்கும் இக்கொள்கைகள் வழிவகை செய்யும்.
தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை 2024 / TAMILNADU WATER FUNNEL POWER PROJECTS POLICY 2024
நீரேற்று புனல் மின் திட்டம் என்பது மின்சாரத்தை சேமிக்கும் மின் நிலையங்களாகும். பகலில், சூரிய மின் உற்பத்தி நேரங்களில் நீரை உயரத்தில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு ஏற்றம் செய்து மின்சார ஆற்றலை சேமிக்கின்றன.
இரவு நேரங்களில், மின்சார தேவை அதிகமாக இருக்கும் போது, சேமித்து வைக்கப்பட்ட நீரானது டர்பைன்கள் வழியாக விடப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கையின் வாயிலாக, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் நீரேற்று புனல் மின் திட்டங்களை செயல்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் வரும் 2030-ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் சூரிய மின்உற்பத்தி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாக உள்ள அதிகப்படியான பசுமை எரிசக்தியை சமப்படுத்தி மின் கட்டமைப்பில் மின்சாரமாக மாற்றி பயன்படுத்த நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை வழிவகுக்கும்.
சிறிய புனல் மின் திட்ட கொள்கை 2024 / SMALL FUNNEL POWER PROJECT POLICY 2024
சிறிய புனல் மின் திட்டங்கள் என்பது 100 கி.வா. முதல் 10 மெகாவாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட சிறிய அளவிலான நீர்மின் நிலையங்கள் ஆகும்.
இக்கொள்கையின் வாயிலாக, தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் பாதிப்பில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.
சிறிய நீர்மின் திட்டங்கள் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற தூய்மையான மின்சார வளத்தை உருவாக்க இயலும்.
நிலையான எரிசக்தி இருப்பை உறுதி செய்ய குறைந்துவரும் மரபுசார் எரிபொருளான நிலக்கரி, எரிவாயு போன்ற இருப்புகளை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம்.
சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு புனல் திட்டங்களால் கிடைக்கும் நிலையான மின் உற்பத்தி, மின் கட்டமைப்பின் திறனை சமன்படுத்த பயன்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்க முடியும்.
சிறு புனல் திட்டங்களால் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்.
0 Comments