சுவிட்சர்லாந்தின் லாசேனில் 'டையமண்ட் லீக்' தடகளப் போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இப்போட்டியில் விளையாடவில்லை. முதல் வாய்ப்பில் 82.10 மீ., எறிந்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது வாய்ப்பில் 83.21 மீ., எறிந்தார்.
அடுத்த இரு வாய்ப்புகளில் 83.13, 82.34 மீ., மட்டும் எறிந்தார். ஐந்தாவது வாய்ப்பில் எழுச்சி கண்ட இவர், 85.58 மீ., எறிந்து 3வது இடத்துக்கு முன்னேறினார்.
தொடர்ந்து அசத்திய இவர், கடைசி வாய்ப்பில் அதிகபட்சமாக 89.49 மீ., எறிந்து 2வது இடத்தை உறுதி செய்தார். லாசேனில் 'ஹாட்ரிக்' தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, லாசேன் 'டையமண்ட் லீக்' போட்டியில் தனது 3வது பதக்கத்தை பெற்றார். இதற்கு முன் 2022, 2023ல் தங்கம் வென்றிருந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (90.61 மீ.,) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (87.08 மீ.,) வெண்கலம் வென்றார்.
0 Comments