Recent Post

6/recent/ticker-posts

பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் நிறைவு / Paris Olympics 2024 Closing Ceremony

பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகள் நிறைவு / Paris Olympics 2024 Closing Ceremony

33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் நிறைவுற்றன. பாரிஸில் உள்ள ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவை 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து கண்டுகளித்தனர்.

நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீ ஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். 

ஒலிம்பிக் சின்னமான 5 வளையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டன. வெனிஸ் கடற்கரையில் ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ், பில்லி எலிஷ், ஸ்னூப் டோக் மற்றும் டாக்டர் ட்ரே உள்ளிட்டோரின் இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அக்ரோபாட்ஸ், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. 5 முறை கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகியான கேப்ரியெல்லா சர்மியெண்டோ வில்சன் என்று அழைக்கப்படும் ஹெச்.இ.ஆர். 

தேசிய கீதத்தை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான சுடர் அணைக்கப்பட்டது. பின்பு, மைதானத்தின் கூரையில் இருந்து குதித்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி ஒலிம்பிக் கொடியை ஏந்திச் சென்று, 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ்சிடம் ஒப்படைத்தார். விழாவின் கடைசி நிகழச்சியாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மைதானத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை இரவை பகலாக்கி பிரமிப்பை ஏற்படுத்தியது. விழாவில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரின் மனைவி பிரிகிட் மேக்ரான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் மற்றும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவின் தலைவர் டோனி ஸ்டான்குவெட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 126 பதக்கங்களுடன் (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) முதலிடம் பிடித்துள்ளது. சீனா 91 பதக்கங்களுடன் (40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம்) இரண்டாவது இடத்தில் உள்ளது.

20 தங்கம் உட்பட மொத்தம் 45 பதக்கங்களைப் பெற்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன. இந்த ஒலிம்பிக்கில், இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றி 71-வது இடத்தைப் பிடித்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel