தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் முக்கிய நாடாக உள்ளது.அந்த நாட்டின் பிரதமர் பாம் மின்ஹ் சின், மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், மூன்று ஒப்பந்தங்களுக்கான விரிவான ஆய்வும் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது: கிழக்கு நாடுகளுடன் நெருக்கம் என்ற நம் கொள்கையிலும், வலுவான மற்றும் சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியம் என்ற தொலைநோக்கு பார்வையிலும், வியட்நாம் மிக முக்கிய நாடாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வலுவான தொடர்புகள் உள்ளன.
நாம், 2047ல் வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்குடன் பயணிக்கிறோம். அதுபோல வியட்நாமும், தொலைநோக்கு பார்வை - 2045 என்ற இலக்குடன் பயணிக்கிறது.
இருவரும் இணைந்து தங்களுடைய நாட்டின் வளர்ச்சியுடன், பரஸ்பர வளர்ச்சிக்கும் உதவுவோம்.இந்தியா எப்போதும் வளர்ச்சியை ஆதரிக்கிறது. மற்ற நாடுகளை ஆக்கிரமித்து, தன் எல்லையை விரிவுபடுத்துவதை எதிர்க்கிறது.
இந்த வகையில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், அனைத்து நாடுகளும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதி செய்ய, வியட்நாமுடன் இணைந்து செயல்படுவோம். வியட்நாமில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, 2,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் நிதியுதவியுடன், வியட்நாமில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மென்பொருள் பூங்காவை, இரு பிரதமர்களும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தனர்.
0 Comments