Recent Post

6/recent/ticker-posts

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / International Muthamil Murugan Conference at Palani - Chief Minister M.K.Stalin inaugurated

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார் / International Muthamil Murugan Conference at Palani - Chief Minister M.K.Stalin inaugurated

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 24, 25) பழநியில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாட்டு வளாகத்தில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அமைச்சர் பெருமக்கள், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

அதனை தொடர்ந்து மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுகின்றன.

மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel