திண்டுக்கல் மலைக்கோட்டைக்குத் தென் பகுதியில் ஒழுங்கற்ற முறையில் பெருங்கற்காலத்தைச் சோ்ந்த ஒரு கல் அமைப்பு உள்ளது. இந்தக் கல்அமைப்பை ஆய்வு செய்ததில், பழங்காலத்தில் இறந்தோா் நினைவாக எழுப்பப்பட்ட சின்னம் இருப்பது தெரியவந்தது. இதில் கல்லாங்குழிகளும் இடம் பெற்றுள்ளன.
கல்லாங்குழிகள் என்பது பணியாரக்குழி போன்ற ஓா் அமைப்பு. இந்தக் குழிகள் மனித இனத்தின் தொல்பழங்காலத்தில் இருந்தே உருவாக்கப்பட்டு வந்தன. சுமாா் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனத்தால் இந்தக் குழிகள் உருவாக்கப்பட்டன என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல்லில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்காலத்தைச் சோ்ந்த நினைவுச் சின்னத்தில் மொத்தம் 44 குழிகள் கண்டறியப்பட்டன. இந்தக் கல்லாங்குழிகள் 0.5 செ.மீ முதல் 4 செ.மீ ஆழம், 3 செ.மீ முதல் 8 செ.மீ விட்டத்தில் அமைந்துள்ளன.
குழிகள் மூன்று தொகுதிகளாக உள்ளன. முதல் தொகுதியில் 28 குழிகளும், 2-ஆம் தொகுதியில் 7 குழிகளும், 3-ஆம் தொகுதியில் 9 குழிகளும் உள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த மூதாதையா் நினைவாக அவா்களின் வழித்தோன்றல்களால் இவை அமைக்கப்பட்டிருக்கலாம்.
ஒரு சில குழிகளை மற்ற குழிகளுடன் இணைக்கும் வாய்க்கால் போன்ற ஆழமான கோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மறைந்த மனிதா்கள் இடையே உள்ள ஏதோ ஓா் உறவு முறையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஒரு குழியில் நீா் ஊற்றினால், இந்த வாய்க்கால் மூலம் இணைக்கப்பட்ட மற்ற குழிகளுக்கு சென்றடைகிறது. இதுபோன்ற வாய்க்கால் கோடுகளால் இணைக்கப்பட்ட கல்லாங்குழிகளை பொலிவியா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நாம் காணலாம்.
இந்தச் சின்னத்தின் மேற்குப் பகுதியில் 3, 4 செ.மீ உயரமுள்ள செங்குத்தான கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 தொகுதிகளில் 131 கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோடுகள் எல்லாம் பெருங்கற்காலச் சின்னத்தையும் கல்லாங்குழிகளையும் உருவாக்க செலவழிக்கப்பட்ட மனித நாள்களாகக் கருதலாம்.
இந்தக் கோடுகள் உலோக ஆணிகள் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் பெருங்கற்காலமும் உலோக காலமும் சமகாலத்தவை என்பதை இந்தச் சின்னமும் இதில் உள்ள கல்லாங்குழிகளும் உறுதிப்படுத்துகின்றன.
0 Comments