Recent Post

6/recent/ticker-posts

டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார் / Prime Minister Modi hoisted the national flag at Delhi's Red Fort

டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார் / Prime Minister Modi hoisted the national flag at Delhi's Red Fort

டில்லி, செங்கோட்டையில் 78வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11ம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.

சாகச நிகழ்ச்சிகள் முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். 

பாதுகாப்பு சுதந்திர தினம் முன்னிட்டு தேசிய தலைநகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் , 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தின கொடியேற்று விழா உற்சாகமாக நடந்தது. அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றி வைத்து கொண்டாடினர்.

78-வது சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவை பல்வேறு துறைகளிலும் உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு, நாட்டின் வளர்ச்சியை வடிவமைத்து, புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில், வருங்காலத்திற்கான தொடர் இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.

வாழ்க்கையை எளிதாக்குதல் என்ற தமது தொலைநோக்கு கொள்கையை ஒரு இயக்கமாக செயல்படுத்த இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பண்டைக்கால நாளந்தா பல்கலைக்கழக உணர்வுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், உயர்கல்வி கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக மாற்ற வேண்டும் என்றார். 

செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, தொழில்நுட்ப தன்னிறைவை அதிகரிக்க வேண்டும் என்றார்.

2024 பட்ஜெட் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, உலகின் திறன்மிகு தலைநகராக மாற்றும் நோக்கில் அரசு அறிவித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றியமைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையை வெளியிட்ட பிரதமர் மோடி, அதன் பரந்து விரிந்த வளங்கள் மற்றும் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களையும் அறிவித்தார்.

உள்நாட்டு வடிவமைப்பு திறன் குறித்து பாராட்டிய பிரதமர், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யுமாறும் வலியுறுத்தினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களை சந்தைப்படுத்த, இந்தியா தனது செழுமையான பழங்கால மரபுகள் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சியில் பசுமை வேலைவாய்ப்புகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்தியா, ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற பாதையை பின்பற்ற வேண்டும் என்று கூறிய பிரதமர், இதற்காக தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். முதலீடுகளை ஈர்க்கவும், நல்லாட்சிக்கான உத்தரவாதம் வழங்கவும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளை உருவாக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

தர நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கான உறுதிப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்தியாவின் தர விதிகள் சர்வதேச குறியீடாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார். 

2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின் குறிக்கோளையும் பிரதமர் மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட இருப்பதாக அறிவித்த பிரதமர் மோடி, நாட்டின் மருத்துவக் கல்வி திறனை விரிவுபடுத்தி, அதிகரித்து வரும் சுகாதார சேவை வல்லுநர்களின் தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம் என்றார்.

அரசியலில் ஒரு லட்சம் இளைஞர்களை, குறிப்பாக அரசியல் பின்புலம் இல்லாத குடும்பங்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். வாரிசு, சாதிய தீமைகளை எதிர்த்துப் போராட, இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel