பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கியை, கீவ் நகரில் இன்று (23.08.2024) சந்தித்தார். மரின்ஸ்கி அரண்மனைக்கு வந்த பிரதமரை அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார்.
இரு தலைவர்களும், இருதரப்பு உறவு குறித்தும் விவாதித்தனர், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
இரு தலைவர்களின் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான இந்திய மனிதாபிமான மானிய உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024-2028 க்கான கலாச்சார ஒத்துழைப்பு திட்டம் கையெழுத்தானது.
பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அரசுக்கு, ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான பாரதத்தின் சுகாதார முன்முயற்சிக்கான (BHISHM) நான்கு க்யூப்களை இன்று (23.08.2024) வழங்கினார்.
மனிதாபிமான உதவிக்காக பிரதமருக்கு உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இந்த க்யூப்கள், காயமடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சையளிக்கவும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றவும் உதவும்.
ஒவ்வொரு BHISHM க்யூபும், அனைத்து வகையான காயங்கள் மற்றும் மருத்துவ சூழ்நிலைகளுக்கான முதல் வரிசை பராமரிப்புக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டுள்ளது.
ஒரு நாளைக்கு 10-15 அடிப்படை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களும் இதில் அடங்கும். அவசர சிகிச்சை, ரத்தப்போக்கு, தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் பல்வேறு வகையான சுமார் 200 நிகழ்வுகளைக் கையாளும் திறன் க்யூப்கள் உள்ளன.
இது தனது சொந்த சக்தியையும், ஆக்ஸிஜனையும் குறைந்த அளவில் உருவாக்க முடியும். க்யூபை இயக்க உக்ரைன் தரப்புக்கு ஆரம்ப பயிற்சி அளிக்க இந்தியாவில் இருந்து நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
0 Comments