பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அமலுக்கு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்.
ஒருவர் முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். இதற்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும்.
தற்போது வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. இந்தப் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
0 Comments