ஹரியானா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
ஹரியானாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையின் ஒரு பகுதியாக ரூ.194.867 கோடி மதிப்புள்ள நிபந்தனையற்ற மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிதி விடுவிப்பதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்த மாநிலத்தில் உள்ள 18 தகுதியான மாவட்ட ஊராட்சிகள், 139 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 5911 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
திரிபுராவிலுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக ரூ.31.40 கோடி நிபந்தனையற்ற மானியமாகவும், வரையறுக்கப்பட்ட மானியத்தின் முதல் தவணையாக ரூ.47.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி அனைத்து 1260 கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.
மிசோரமுக்கும் நிதி ஆணையம், நிதியை வழங்கியுள்ளது. இது 2022-23 நிதியாண்டின் நிபந்தனையற்ற மானியங்களின் 2-வது தவணையாகும், இதில் ரூ.14.20 கோடி மற்றும் 2022-23 நிதியாண்டின் 2-வது தவணை வரையறுக்கப்பட்ட மானியங்கள் ரூ.21.30 கோடி அடங்கும். இந்த நிதியானது தன்னாட்சி மாவட்ட கவுன்சில் பகுதிகள் உட்பட அனைத்து 834 கிராம சபைகளுக்கும் பகிரப்படும்.
0 Comments