கிறிஸ்தவ தேவாலயத்தால் நடத்தப்படும், உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்துக்கு வருமான வரி விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தார். ''சம்பளம் நேரடியாக மறை மாவட்டத்துக்கு செல்வதால், டிடிஎஸ் பிடித்தம் செய்ய முடியாது'' என்று தீர்ப்பில் கூறியிருந்தார்.
தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, 'கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளம், வருமான வரி பிடித்தத்துக்கு உட்பட்டதே' என்று கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தேவாலய பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தார், ''சம்பளமாக அரசு வழங்கும் மானியம் நேரடியாக மறை மாவட்டத்துக்குத்தான் செல்கிறதே தவிர, பள்ளிகளில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களுக்கு செல்லவில்லை. எனவே, அவர்களது சம்பளத்தில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்று வாதிட்டார்.
ஆனால், இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அவர்கள் தமது உத்தரவில் கூறியதாவது: ஒருவர் சம்பளம் பெறுகிறார் என்றால், அதற்கு கட்டாயம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும். டிடிஎஸ் பிடித்தம் செய்வதில் விலக்கு அளிக்குமாறு கோரமுடியாது.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசு மானிய தொகை வழங்காது அரசு ஒருபோதும் மறை மாவட்டத்துக்கு மானிய தொகையை வழங்காது. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் நபர்களுக்காகத்தான் அந்த தொகையை வழங்குகிறது.
அந்த சம்பளமும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் வங்கி கணக்கில்தான் செலுத்தப்படுகிறது. அதை அவர்களது வருமானமாகத்தான் கருத வேண்டும்.
எனவே, தேவாலயத்தால் நடத்தப்படும், உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் வருமான வரிக்கு உட்பட்டதே என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம்.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், தேவாலய பள்ளி நிர்வாகங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
0 Comments