குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த இடமான பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனம் ஆஸ்தான் நான்கானா சாஹிப்பில் கடந்த நவம்பா் 14-ஆம் தேதி தொடங்கியது.
இந்த குருத்வாராவில் நடைபெறும் மதச் சடங்குகளில் கலந்துகொள்ள இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள ஏராளமான சீக்கியா்கள் யாத்திரை மேற்கொண்டனா்.
நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்தியா திரும்பும் சுமாா் 2,500 இந்தியா்களை அந்நாட்டின் முதல் சீக்கிய அமைச்சரும், பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்த குழுத் தலைவருமான ரமேஷ் சிங் அரோரா வழியனுப்பி வருகிறாா்.
இந்த நிகழ்வை முன்னிட்டு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ. 55 சிறப்பு நினைவு நாணயத்தை அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
நாணயத்தின் ஒரு பக்கம் குருத்வாரா ஜனம் அஸ்தான் நான்கானா சாஹிப் கல்வெட்டுகளும், மறுபுறம் பிறை மற்றும் நட்சத்திரத்துடன் உருது மொழியில் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயம் 79% பித்தளை, 20% துத்தநாகம் மற்றும் 1% நிக்கல் ஆகியவற்றால் ஆனது. 30 மி.மீ. விட்டமும், 13.5 கிராம் எடையும் கொண்டது.
0 Comments