வன்முறை, கலவரம், குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவோரின் வீடுகளை புல்டோசர் வாயிலாக இடிக்கும் நடவடிக்கை புதுடில்லியில் துவங்கியது.
பிறகு உ.பி., உள்பட பல மாநிலங்களில் இதுபோன்று புல்டோசர் வாயிலாக வீடுகள் இடிக்கப்படுவது தொடர்ந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் புல்டோசர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
இந்த வழக்கில், அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று (நவ.13) தீர்ப்பளிக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட் கூறி இருந்தது. இந்நிலையில், இன்று (நவ., 13) சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசரால் இடிப்பது சட்ட விரோதம். அவர்களுக்கு இருக்கும் சில உரிமைகளை அரசு பறிக்கக் கூடாது. யார் குற்றவாளி என்பதை அரசு அதிகாரிகளே முடிவு செய்ய முடியாது.
சட்டத்தை கையிலெடுக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட் வகுத்துள்ள நெறிமுறைகளை மாநில அதிகாரிகள் தன்னிச்சையாக மீற முடியாது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது.
ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டால், முழு குடும்பங்கள் தங்குமிடத்தை இடிக்க அதிகாரிகளை எவ்வாறு அனுமதிக்க முடியும்? நியாயமான விசாரணை இல்லாமல் யாரையும் குற்றவாளியாக கருத முடியாது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் முன்னதாக, விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தன்னிச்சையாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, ஆட்சி அடிப்படையை தகர்த்துவிடும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதாலேயே அவரது வீட்டை அரசு இடிப்பது, அதிகார பகிர்வை மீறுவதாகும். இருப்பிட உரிமை என்பது அரசமைப்பு சாசனம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.
நடுராத்திரியில் வீட்டை இடித்து குழந்தைகள், பெண்களை தெருவில் விடும் நடவடிக்கை மகிழ்ச்சி தரவில்லை. புகாரை அடிப்படையாக கொண்டு ஒரு நபரை குற்றவாளி என அரசு தீர்மானித்து வீட்டை இடிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
0 Comments