தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும். இதன் மூலம், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர் உயிரிழந்தால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை நியமனதாரர் பெற முடியும்.
இந்நிலையில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவின்படி வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரர்களாக 4 பேரை குறிப்பிடலாம்.
வங்கித் துறையின் நிர்வாக தரநிலைகள், வங்கிகளில் பணம் செலுத்துவோர் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல், பொதுத் துறை வங்கிகளின் தணிக்கை தரத்தை மேம்படுத்துதல், கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் பதவிக் காலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை இந்த மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் (தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் தவிர) பதவிக் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. மாநில கூட்டுறவு வங்கி வாரியத்தில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநரும் கடமையாற்ற இந்த மசோதா அனுமதிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1980 ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர, மொத்தம் 19 திருத்தங்கள் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன.
வங்கித் துறையை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
0 Comments