முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூச்சுத்திணறல் காரணமாக டிசம்பர் 26 இரவு 8 மணி அளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், 9.51 மணிக்கு காலமானார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக மத்திய அரசு சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் எந்தவித அரசு விழாக்கள் நடைபெறாது. மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கூடுகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
பொதுவாக முன்னாள் பிரதமர்கள் மறைந்தால், முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும், அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும். தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
0 Comments