தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டி முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் ஜனவரி 6-ம் தேதி முதல் 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இந்த சம்பவத்தில் கைதான மட்டுமில்லாமல், ஞானசேகரன் போனில் பேசிய அந்த நபர் யார் என்று கேள்வி எழுப்வும் விதமாக அ.தி.மு.க உறுப்பினர்கள் 'யார் அந்த சார்' என்று பேட்ஜ் அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும், தொடர்ந்து, 'யார் அந்த சார்' என்று பேட்ஜ் உடன் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரன் தி.மு.க நிர்வாகி இல்லை, தி.மு.க அனுதாபி மட்டுமே என்று மு.க. ஸ்டாலின் கூறினார். மேலும், யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் மரணமடையும் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் தண்டனையை அதிகரிக்கும் 2025 குற்றவியல் திருத்தச் சட்ட மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது.
பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, தண்டனைகள் கடுமையாக்கப்படும். பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால், ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம் வகை செய்யப்படும்' என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்க மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சட்டங்களையும் தண்டனையையும் கடுமையாக்கும் மசோதாவை தமிழக அரசு கொணடு வந்துள்ளது.
குறிப்பிட்ட சில குற்றங்களில் வழக்குப் பதிவு செய்யப்படும்போது, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், அதில் தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்' என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து, மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments