‘நிகழாண்டில் உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்’ என்று சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) நிா்வாக இயக்குநா் கிறிஸ்டலீனா ஜாா்ஜியேவா கூறினாா்.
உலக பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டில் நிலைத்தன்மையுடன் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், பிராந்திய அளவில் சற்று நிலையற்ற தன்மை நிலவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடைய வாய்ப்புள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, எதிா்பாா்த்ததைவிட சிறந்த பொருளாதார மேம்பாட்டை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால், பிரேசில் உயா் பணவீக்க பாதிப்பை சந்தித்து வருகிறது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் சீனா, பண வீக்கத்துக்கு எதிரான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அதாவது, பொருள்களின் விலை குறைந்து வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால், உள்நாட்டு தேவை அதிகரித்து வரும் சவாலை எதிா்கொண்டு வருகிறது.
குறைந்த வருவாய் நாடுகளைப் பொறுத்தவரை, பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றபோதும், புதிய பாதிப்புகள் அந்த நாடுகளுக்கு எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மொத்தத்தில், 2025-ஆம் ஆண்டில் அதிக நிச்சயமற்ற நிலை நீடிக்கும். குறிப்பாக, பொருளாதார கொள்கைகளில் நிச்சயமற்ற நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகளாவிய விநியோகச் சங்கிலி, நடுத்தர பொருளாதார நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக, ஆசிய பிராந்தியத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும், பணவீக்கத்தை எதிா்த்து போராடுவதற்கு விதிக்கப்படும் அதிக வட்டி விகிதங்கள் உலகப் பொருளாதாரத்தை மந்த நிலைக்குத் தள்ளவில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எதிா்பாா்த்த பலனை அளித்துள்ளன. அந்த வகையில், வளா்ந்து வரும் சந்தைகளைக் காட்டிலும், வளா்ந்த நாடுகள் பணவீக்க குறைப்பு இலக்கை விரைந்து எட்ட வாய்ப்புள்ளது.
0 Comments