குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அங்கு தேசிய வனஉயிரின வாரியத்தின் 7-வது கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் வனவிலங்கு பாதுகாப்பிற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை தேசிய வனஉயிரின வாரியம் மதிப்பாய்வு செய்தது.
புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குவதில் படைக்கப்பட்டுள்ள சாதனைகள் மற்றும் புலிகள் சரணாலயம், யானைகள், பனிச்சிறுத்தைகள் பாதுகாப்புத் திட்டம், போன்ற முதன்மையான திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
டால்பின்கள் மற்றும் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், சர்வதேச அளவில் சிறுத்தை பாதுகாப்புக்கான கூட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆற்று டால்பின் கணக்கெடுப்பு அறிக்கையைப் பிரதமர் வெளியிட்டார்.
இந்த அறிக்கையின்படி மொத்தம் 6,327 ஆற்று டால்பின்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்னோடி முயற்சியில் எட்டு மாநிலங்களில் உள்ள 28 நதிகளில் உள்ள டால்பின்களை கணக்கெடுக்கும் பணியும் அடங்கும்.
3150 மனித நாட்கள், 8,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிற்கு இந்தக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
டால்பின்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து பீகார், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களும் உள்ளன.
0 Comments