ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமான வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம், குஜராத்தின் ஜாம்நகரில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த மையத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாயிரம் வகையான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அழிந்து வரும் நிலையில் இருந்த ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வந்தாரா விலங்குகள் பராமரிப்பு மையத்தில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அவரை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, அவர்களது இளைய மகன் அனந்த் அம்பானி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வந்தாரா மையத்தில் உள்ள கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் உயிரினங்களை பார்வையிட்டார். அப்போது, ஆசிய வகை சிங்கக் குட்டிகள் மற்றும் வெள்ளை நிற சிங்க குட்டிக்கு பால் புட்டி மூலம் பிரதமர் மோடி பாலூட்டி மகிழ்ந்தார்.
பராமரிப்பு மையத்தில் புதிதாக ஈன்ற குட்டிகளை பார்வையிட பிரதமர் மோடி, அறுவை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் சிங்கம் மற்றும் சிறுத்தையை பார்வையிட்டார்.
தொடர்ந்து, சிம்பன்சி, ஊராங்குட்டான், நீர் யானைகள், முதலைகள், இரண்டு தலை பாம்பு, இரண்டு தலை ஆமை உள்ளிட்டவற்றை அருகில் இருந்து பார்த்து ரசித்தார். இதேபோன்று கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த சிங்கம், புலி உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி பார்த்து மகிழ்ந்தார்.
0 Comments