வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள சூரசந்த்பூர் (Churachandpur) மற்றும் மெய்தி சமூகத்தினர் அதிகம் உள்ள பிஷ்ணுபூர் பகுதிகளில் ஆய்வு நடத்திய நீதிபதிகள் குழு, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்ட உதவி மையம் மற்றும் சுகாதார மையங்களைத் திறந்து வைத்தனர்.
இதையடுத்து சூரசந்த்பூரில் குகி சமூகத்தினருக்கான நிவாரண முகாமை நீதிபதிகள் குழு பார்வையிட்ட நிலையில், அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைக்கும்படியும், அமைதி திரும்ப அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி பி.ஆர். கவாய் கேட்டுக் கொண்டார்.
மேலும் மக்கள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நீதித்துறை இணைந்து விரைவாக தீர்வு காணும் என்றும் உறுதியளித்தார்.
அரசியலமைப்பு சட்டம் நம்மை ஒற்றுமையாகவும், வலிமையாகவும் வைத்திருப்பதாகக் கூறிய நீதிபதி கவாய், மணிப்பூரில் அமைதி திரும்புவதை அரசியலமைப்பு சட்டம் ஒரு நாள் உறுதி செய்யும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து இன்று மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் 12 ஆவது ஆண்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பங்கேற்க உள்ளது.
0 Comments