முதன்மையான பன்னாட்டு விமான போர் பயிற்சியான டெஸர்ட் ஃபிளாக்-10 என்ற போர்ப் பயிற்சியில் பங்கேற்க இந்திய விமானப்படையின் ஒரு பிரிவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தைச் சென்றடைந்தது.
இந்தப் பயிற்சியில் மிக்-29, ஜாகுவார் ஆகிய விமானங்களை இந்திய விமானப்படை களமிறக்குகிறது. டெஸர்ட் ஃபிளாக் பயிற்சி என்பது ஐக்கிய அரபு அமீரக விமானப்படையால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டுப் பயிற்சியாகும்.
இதில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி, கத்தார், சவுதி அரேபியா, கொரிய குடியரசு, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இந்திய விமானப்படையுடன் பங்கேற்கின்றன. இந்த பயிற்சி 2025 ஏப்ரல் 21 முதல் மே 08 வரை நடைபெறவுள்ளது.
உலகின் மிகவும் திறமையான விமானப் படைகளுடன் செயல்பாட்டு அறிவு, சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் சிக்கலான, மாறுபட்ட போர் செயல்பாடுகளை மேற்கொள்வதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
இத்தகைய பயிற்சிகளில் பங்கேற்பது பரஸ்பர புரிதலை மேம்படுத்துகிறது. மேலும் பங்கேற்கும் நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துகிறது.
இந்திய விமானப்படையின் பங்கேற்பு பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளையும் செயல்பாட்டுத் தன்மையையும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
0 Comments